கோயம்புத்தூர்: இரசாயன கரைசல் நீரை குடித்த 40 ஆடுகள் பலியான சோகம்!
கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் அருகே இரசாயன கரைசல் நீரைக் குடித்த 40 ஆடுகள் உயிரிழந்தது.
கோயம்புத்தூர் மாவட்டம் ஆலாந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட காளிமங்கலம் மலைக் கிராமத்தில் கால்நடைகள் வளர்ப்பது பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்த கிராமத்தைச் சேர்ந்த சாவித்திரி, விஜயா, மங்கலம் மற்றும் கண்ணம்மா ஆகிய நான்கு பெண்கள் சுமார் 40க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றனர்.
இவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம் போல மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றனர். ஆடு மேய்த்து விட்டு மீண்டும் கிராமப் பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது கிராமத்துக்குச் செல்லும் வழியிலிருந்த வாழைத் தோட்டத்தில் பாய்ச்சி இருந்த தண்ணீரை ஆடுகள் குடித்துள்ளது. பின்னர் மீண்டும் பட்டிக்குச் செல்லும் போது ஆங்காங்கே ஆடுகள் திடீரென மயங்கி விழுந்து பலியானது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆட்டின் உரிமையாளர்கள் சென்று பார்த்தபோது ஆடுகளின் வாயில் நுரை தள்ளியது தெரியவந்தது.
விசாரணையில் தோட்டத்தின் உரிமையாளர் வாழை விளைச்சலுக்காக உர கரைசல் தண்ணீரைக் கலந்து தோட்டத்தில் விட்டிருந்ததும், அதனை ஆடுகள் குடித்ததால் உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இறந்த ஆடுகளுக்குக் கால்நடை மருத்துவர் குழுவினர் உடற்கூறு ஆய்வில் மேற்கொண்டனர்.
பின்னர் அந்த ஆடுகள் அதே கிராமத்தில் புதைக்கப்பட்டது. ஆடுகள் இறந்ததால் உரிமையாளர்களுக்கு ரூ.5 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது