கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடரும்…!
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விசைத்தறி உரிமையாளர்களுடனான பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது, இதனால் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என விசைத்தறி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
கூலி உயர்வு வழங்கக் கோரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். 28 வது நாளாக தங்களது விசைத்தறிகளை இயக்காமல் வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடர்ந்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை, மாவட்ட நிர்வாகத்துடனான பேச்சு வார்த்தை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையின் போது, தொழிலாளர் நலத்துறை கோவை மண்டல கூடுதல் ஆணையர் சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பேச்சு வார்த்தையின் போது 50 முதல் 60 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும் என விசைத்தறி உரிமையாளர் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் நேற்று நடைபெற்ற ஜவுளி உற்பத்தியாளர்கள் பேச்சு வார்த்தையில் 5 சதவீதம் மட்டுமே கூலி உயர்வு தர முடியும் எனத் தெரிவித்தது குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் குறைந்தபட்சமாக 30 சதவீதம் கூலி உயர்வையாவது வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனர். இந்நிலையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
இது குறித்துப் பேசிய விசைத்தறி உரிமையாளர்கள் கூறும் போது : இன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சற்று முன்னேற்றம் இருந்தது. ஆனால் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இதனால் வேலை நிறுத்த போராட்டம் தொடரும். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மற்ற நிர்வாகிகளுடன் கலந்து பேசி அறிவிப்போம். மீண்டும் பேச்சு வார்த்தைக்கு அழைக்கும் போது, மீண்டும் கூலி உயர்வு குறித்து வலியுறுத்துவோம் எனத் தெரிவித்தார்