சித்திரை திருநாள் மற்றும் விசு பண்டிகையை முன்னிட்டு சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
சித்திரை திருநாள், விசு பண்டிகையை முன்னிட்டு கோயம்புத்தூர் சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் குவிந்த தமிழ் மற்றும் மலையாள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சித்திரை திருநாளை முன்னிட்டு கோயம்புத்தூரில் உள்ள புளியகுளம் விநாயகர் கோவில், பேரூர் பட்டீசுவரர் கோவில், மருதமலை முருகன் என மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அதே போல இன்று கேரளா மக்களால் கொண்டாடப்படும் விசு பண்டிகையும் உள்ளதால் கோயம்புத்தூரில் வசித்து வரும் மலையாள மக்களும் வழிபாட்டுத் தளங்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். இதில் சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலுக்குக் காலை முதல் குடும்பத்துடன் வந்த தமிழ் மற்றும் மலையாள மக்கள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பெரும்பாலும் தமிழ், மலையாள தம்பதிகள் ஐயப்பன் கோவிலில் ஒன்றிணைந்து சித்திரை திருநாள், விசு பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.