கோயம்புத்தூர் மாநகர காவல்துறையின் பவள விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி!
கோயம்புத்த்தூர் மாநகர காவல் துறையின் பவள விழாவை முன்னிட்டு, சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மாநகர காவல்துறையினர் 5 கிலோ மீட்டர் விழிப்புணர்வு பேரணிச் சென்றனர்.
கோயம்புத்தூர் மாநகர காவல் துறை கடந்த 1990 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன் 35 ஆண்டு, பவள விழாவைக் கொண்டாடும் விதமாக மாநகர காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் அனைத்து காவல் நிலையங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகர காவல் துறையின் பவள விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கான பேச்சு போட்டி, பொதுமக்கள் – காவல்துறை நல்லுறவு கிரிக்கெட் போட்டி, உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

அதன் துவக்கமாக மாநகர காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது. இதனை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் கொடியசைத்து துவக்கி வைத்து, பேரணியுடன் நடந்து சென்றார். காவல் ஆணையர் அலுவலகத்தில் துவங்கி ரேஸ்கோர்ஸ் வழியாக, காவல் பயிற்சி வளாகம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிற்குச் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.
இது குறித்துப் பேசிய காவல் ஆணையர் சரவணசுந்தர் கூறும் போது : இதே நாளில் 1990 ஆண்டு முதல் மாநகர காவல் துறை செயல்படத் துவங்கியது. அதனைக் கொண்டாடும் விதமாகப் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, பாய்ஸ் கிளப் இளைஞர்களுக்கான போட்டிகள், பொதுமக்கள் – காவல்துறை நல்லுறவு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது. துவக்கமாகத் தலைக் கவசம் அணிய வேண்டும், சாலை விதிகளைப் பின்பற்ற வலியுறுத்தி வாக்கத்தான் நடைபெற்றது. மாநகர காவல்துறை அனைவருக்கும் பவள விழா மற்றும் சித்திரை திருநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக கூறினார்.