பாஜக – அதிமுக கூட்டணிக்கு எந்த அழுத்தமும் இல்லை, தெளிவான முடிவு – கௌவுதமி
கோயம்புத்தூரில்யி நடைபெற்ற ஆட்டிசம் குறித்து விழிப்புணர்வு வீடியோ வெளியீட்டு விழாவில் நடிகையும், அதிமுக உறுப்பினருமான கவுதமி கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும் போது : பாஜக – அதிமுக கூட்டணி நல்ல முடிவு தான், இல்லையெனில் இந்த முடிவை பொதுச்செயலாளர் எடுத்திருக்க மாட்டார். பாஜகவில் இருந்து அதிமுக வந்துள்ளேன். கூட்டணிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பாஜகவில் இருந்து விலகியதற்கும் அதிமுகவில் இணைந்ததற்கும் நிறைய இடைவெளி உள்ளது.
ஓ.பி.எஸ், டிடிவி தினகரன், அதிமுக இணைப்பு என்ற பேச்சு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்த கட்சியில் அவர்கள் இருப்பதாலோ, அல்லது விலகிப் போவதாலோ அதிமுகவை எதையும் செய்ய முடியாது. பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜக – அதிமுக கூட்டணியில் உள்ளதா? இல்லையா? என்பதை விட நேரம் வரும்போது பார்ப்போம் என்று தான் எடப்பாடியார் கூறி வந்தார். ஆரம்பத்திலிருந்து மிகத் தெளிவாக எந்தவித குழப்பமும் இல்லாமல் இது திமுகவை வீழ்த்துவதற்கான கூட்டணியாக அமையும், கொள்கைகள் என்பது அந்தந்த கட்சிகளின் தனிப்பட்ட விஷயம்.
ஆனால் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக இந்த கூட்டணி அமைக்கப்பட்டதாக கூறியுள்ளனர். கூட்டணியில் உள்ள அனைவரும் இதை ஏற்றுக் கொண்டார்கள்.
ஆளுநர் செயல்பாடு குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் அதைப்பற்றி பேசி எந்தப் பயனும் இல்லை. அதிமுக – பாஜக கூட்டணி என்பது நீண்ட வரலாறு உடையது. பல தேர்தல்களை சந்தித்துள்ளது. பல வெற்றிகளையும் கண்டுள்ளது. சாதாரண அறிக்கை விடுதல் மூலமாக கடந்து செல்ல முடியாது. அந்த அளவிற்கான ஒற்றுமை உடன்பாடு இல்லை என்றால் இவ்வளவு பெரிய கூட்டணி அமைத்திருக்க முடியாது.
அதிமுக கட்சி மேம்பாடு, வளர்ச்சிக்காக மட்டுமல்லாமல் மக்களின் நலனுக்காக இந்த ஒரு முடிவை எடுத்து இருப்பார்களே தவிர வேறு எந்த சந்தேகமும் தேவையில்லை. திமுக ஆட்சியைப் பொருத்தளவு விலைவாசி அதிகரித்துள்ளது, ஊதியம் உயரவில்லை, வேலைவாய்ப்பு இல்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, யாருடைய உரிமையும் பாதுகாக்கப்படவில்லை.
நான்காண்டுகள் முடிந்து விட்டது, இனிவரும் காலங்களில் அவர்களது செயல்பாடுகள் வெறும் மாயையாக மட்டுமே இருக்கும். உண்மையாக மக்களுக்கு உழைக்கும் ஆட்சி என்றால் பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்து மக்கள் பணியை செய்திருக்க வேண்டும். 2026 -ல் அதிமுக தலைமையிலான என்.டி.ஏ ஆட்சி அமையும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எந்த ஒரு விஷயத்திற்கும் அடங்கி செல்பவர் அல்ல. கூட்டணி தொடர்பாக எதுவும் கூற முடியாமல், எதிர்க்கட்சிகள் தேவையில்லாத கருத்துக்களை கூறி வருகின்றனர். எந்த ஒரு அழுத்தத்தின் காரணமாகவும் இந்த கூட்டணி இல்லை.
சிலிண்டர் விலை உயர்வு குறித்த கேள்விக்கு: காய்கறி விலை, பெட்ரோல் டீசல் விலை, மின்கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு குறித்தும், பள்ளி, கல்லூரி கட்டண உயர்வு குறித்து பேசுங்கள். தனிப்பட்ட சமையல் சிலிண்டர் விலை உயர்வு குறித்து மட்டும் ஏன் பேசுகிறீர்கள் என தெரிவித்தார்.