உயர் மின் அழுத்தம் பாய்ந்து இரு கைகளை இழந்த பெண்- அறுவை சிகிச்சை மூலம் செயற்கை கைகள் பொருத்தி கோயம்புத்தூர் அரசு மருத்துவர்கள் சாதனை
உயர் மின் அழுத்தம் பாய்ந்து இரு கைகளை இழந்த பெண்ணிற்கு, கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மூலம் செயற்கை கைகள் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சேர்ந்தவர் ருக்மணி (32). இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2024 செப்டம்பர் மாதம், மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை அழைக்க சென்ற போது, உயர் மின் அழுத்த மின்சாரம் பாய்ந்த்து. இதில் அவரது இரண்டு கைகளும் முட்டிக்கு கீழ் செயலிழந்தது.
இதையடுத்து கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரண்டு கைகளும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. மேலும் செயற்கை கைகள் பொருத்துவதற்கான நடவடிக்கைகளில் மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் காயங்கள் முழுமையாக சரியான நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட ருக்மணிக்கு ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மூலம் முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, செயற்கை கைகள் பொருத்தப்பட்டது. “யுனிவர்சல் கப்” என்ற சுய உதவி சாதனம் மூலம் ருக்மணிக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது.
தொடர் பயிற்சியின் பலனாக இன்று அவர் தனது பெயரை எழுதவும், அன்றாடம் தனது வேலைகளையும் செய்து வருகிறார். மேலும் ருக்மணி வீட்டை தூய்மை பணி செய்யும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
மேலும் தமிழகத்திலேயே செயற்கை கை, கால்கள் தயாரிக்கும் குழுவை வைத்துள்ள ஒரே மருத்துவமனையாக உள்ள கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை முதல்வர் காப்பீடு திட்டத்தின் மூலம் சுமார் 200 பேருக்கு செயற்கை கைகள் மற்றும் கால்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.