வெள்ளியங்கிரி மலை ஏறிய வங்கி மேலாளர் உயிரிழப்பு!
கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி மலை ஏறிய காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வங்கி மேலாளர் திடீரென மயங்கி விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்
தென் கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளிங்கிரி மலையேற்றத்திற்குக் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் மலையேறும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளிங்கிரி மலையேறும் பக்தர்களின் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் மலையின் அடிவாரம் மற்றும் முதலாவது மலையில் அரசு சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ முகாமில் இருதய நோய் உள்ளிட்ட உடல் பிரச்சினைகள் உள்ள பக்தர்கள் மருத்துவ முகாமில் தங்கள் உடல் நிலையைப் பரிசோதனை செய்துவிட்டு மலையேறுமாறு மாவட்ட நிர்வாகமும் அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன் மகன் ரமேஷ் (42). இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி ரமேஷ் தன்னுடன் பணிபுரியும் ஐந்து நண்பர்களுடன் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து தனது காரில் புறப்பட்டு கோவை வந்தார்.
கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் அனைவரும் மலையேறி உள்ளனர் நள்ளிரவில் ஏழாவது மலையில் உள்ள சுயம்பு லிங்கத்தைத் தரிசனம் செய்த ரமேஷ் குமார் மற்றும் அவரது நண்பர்கள் மீண்டும் அதிகாலை 5 மணி அளவில் மலையேற துவங்கி உள்ளனர். அப்போது 5.30 மணி அளவில் ஆறாவது மலைக்கு வந்த போது திடீரென ரமேஷ் மயங்கி விழுந்தார். உடன் இருந்த நண்பர்கள் மற்றும் பக்தர்கள் அவரை எழுப்ப முயன்றனர். இருப்பினும் ஒன்றாவது மலையிலிருந்து வந்த அவசரக்கால மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது ரமேஷ் உயிரிழந்தது தெரியவந்தது.
இதை அடுத்து அவரது உடலை சுமைதூக்கும் பணியாளர்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்து அடிவாரத்திற்கு எடுத்து வந்தனர். இதை அடுத்து ரமேஷ் உடல் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன