ஐ.பி.எல் போட்டிகள் சூதாட்டம் – 7 பேர் கைது!
கோயம்புத்தூரில் ஐ.பி.எல் போட்டிகள் நடப்பதை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஏழு பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 1.09 கோடி ரூபாய் பணம் மற்றும் இரு கார்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சூதாட்டம் நடைபெறுவதாக காட்டூர் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து காட்டூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில்,அங்கு இருந்த வாலிபர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த அறையைச் சோதனையிட்ட போது லேப்டாப் மற்றும் செல்போன்கள் இருந்தது. அவர்களிடையே மேற்கொண்ட விசாரணையில் தற்பொழுது நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து சூதாட்டம் நடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் ஒரு கோடியே 9 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது.
அந்த அறையிலிருந்த சௌந்தராஜனர, அருண்குமார், நந்தகுமார், விபுல் சார்த்தனா, விபின் காததேரி,ஜூந்தர், ராகேஸ் ஆகியோரிடம் இருந்து பணத்தைப் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள், 2 பைக்குகள் ,12 செல்போன்கள் ஆகியவற்றை காவல்துறை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை அவர்களைக் காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.