அரசியல்தமிழ்நாடு

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தானே செயல்படுவதாக அறிவிப்பு – ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தானே செயல்படப் போவதாகவும், கட்சியின் தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ், செயல் தலைவராக நியமிக்கப்படுவதாகவும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்..

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ராமதாஸ் தெரிவித்ததாவது:

”தமிழகத்தில் உள்ள 95 ஆயிரம் கிராமங்களுக்கும் நேரில் சென்று மக்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்துள்ளேன். தொடக்கத்தில் எனக்கு விமர்சனங்களும் அவமானங்களும் மட்டும் மிஞ்சின. ஆனாலும் தனக்கென்று ஒரு நோக்கத்துடன் பயணித்தேன். பல கட்ட போராட்ட முன்னெடுப்புகளால் சிறை சென்றுள்ளேன். இதனால் மன வேதனைகளையும், கஷ்டங்களையும் அனுபவித்துள்ளேன். இனியும் உழைப்பேன். இதுநாள் வரை நான் சட்டப்பேரவைக்கோ, நாடாளுமன்றத்துக்கோ செல்ல ஆசைப்பட்டதில்லை. இனியும் நான் அங்கே செல்லவும் விருப்பப் போவதில்லை என்பதை உறுதிப்பட தெரிவிக்கிறேன்.

பாட்டாளி மக்கள் சொந்தங்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பதைவிட மற்ற பதவிகள் எனக்கு உயர்வானதில்லை.

இளைஞர்கள் தங்களின் வழிகாடுதலின்படி செயல்படவேண்டும் என்று என்னை சந்திக்கும் கட்சியினர் நிர்வாகிகள், பாட்டாளி சொந்தங்கள் விடுத்த அன்பு கட்டளையின் பேரிலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமகவின் வெற்றியைக் கருத்தில்கொண்டும் பல்வேறு செயல்திட்டங்களை வகுத்துள்ளேன். அதனை செயல்படுத்தவேண்டி கட்சி அமைப்பில் சில மாற்றங்களை செய்ய முடிவெடுத்துள்ளேன். அந்த முடிவின்படி பாமக-வின் தொடங்கிய நான் நிறுவனர் என்பதோடு நான் இனி கட்சியின் தலைவாரகவும் செயல்பட முடிவெடித்துள்ளேன்.

2026 சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்காக உழைக்கவேண்டும் என்பதற்காக கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்த அன்புமணி ராமதாஸை கட்சியின் செயல் தலைவராக நியமனம் செய்கிறேன்.

கட்சியின் மற்ற நிர்வாகிகளின் பொறுப்புகளில் எவ்வித மாற்றமும் இல்லை. இந்த அறிவிப்பை ஏற்று கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிரமாக செயல்பட்டு 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்காக பணியாற்றவேணடும்.

மே.11 ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள வன்னியர் இளைஞர் சங்க மாநாடு, இதுவரை கண்டிராத வெற்றி மாநாடாக அமையவேண்டும். அதற்கான மாநாட்டுக் குழுவின் தலைவராக உள்ள அன்புமணி ராமதாஸுடன் குழுவினர் அனைவரும் ஒற்றுப்பட்டு உழைக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!