வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திர தேர் விழா…
கோயம்புத்தூர் பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில், பங்குனி உத்திர தேரோட்டம் இன்று நடைபெற்றது.
கோயம்புத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை, பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி மலை தென் கயிலாயம் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. அதன் அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, மஹாசிவராத்திரி, பங்குனி உத்திர தேர்த்திருவிழா ஆகிய விழாக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும்.
இந்தாண்டு, பங்குனி உத்திர தேர்த்திருவிழா, கடந்த 6ஆம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும், காலையும், மாலையும், வேள்விச்சாலைகளும், திருவீதியுலாவும் நடந்தது. மூன்றாம் நாளான புதன்கிழமை, காலை 6 மணிக்கு, நடை திறக்கப்பட்டு, 16 வகையான திரவியங்கள் கொண்டு வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதை தொடர்ந்து, வேள்வி பூஜை நடந்தது. இரவு 8 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஐந்தாம் நாளான வியாழக்கிழமை மாலை, 4 மணியளவில் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான, தேரோட்டம் நடைபெற்றது. சிறப்புப் பூஜைக்குப் பின் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். கோயிலைச் சுற்றித் தேர் வலம் வந்ததைத் தொடர்ந்து பக்தர்களும் தேருடன் சென்றவாறு வழிபாடு செய்தனர்