அரசியல்கோயம்புத்தூர்

இந்த கோடையில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது – செந்தில்பாலஜி

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்த கோடைக் காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு வரவே வராது, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.1.68 கோடி மதிப்பீட்டில் 168 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று பயனாளிகளுக்கு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், ரூ.54.60 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு, அடிக்கல் நாட்டியும் முடிவுற்ற பணிகளைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சியில் முதல்வர் தனிக் கவனம் செலுத்திக் கொண்டு இருக்கிறார். அதேபோல தொடங்கப்பட்டு இருக்கும் பணிகளையும் விரைவாக முடித்து மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

அதேபோல கோவையில் உள்ள விநாயகபுரம் பகுதியில், வட்டாரப் போக்குவரத்துக் கழக அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கான அந்த பகுதியைத் தேர்வு செய்து இருந்தோம், ஆனால் அப்பகுதி மக்கள் எங்களுக்கு விளையாட்டு மைதானத்திற்காக அந்த பகுதி வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அதனால் அவர்களின் கோரிக்கையை ஏற்று மாற்று இடத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்து இருக்கிறோம். இதை சொன்னதுடன், அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியாக விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தித் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அதையும் ஏற்றுக் கொண்டு விரைவில் செய்து கொடுக்கிறோம் எனக் கூறி வந்து இருக்கிறோம், இதுபோன்று முதல்வர் கோயம்புத்தூர் மாவட்டத்தின் வளர்ச்சியில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார்.

உச்ச நீதிமன்றம் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தது குறித்த கேள்விக்கு இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டக் கூடிய ஆளுமையான தலைவராக இருப்பவர் ஸ்டாலின் அவர்கள் தான். அவர்கள் சிறப்பான ஒரு முன்னெடுப்பை எடுத்து நீதிமன்றத்தின் மூலம், அதனை நிலை நாட்டி இருக்கின்றார். இது ஒரு வரலாற்றுச் சாதனையாக நாங்கள் பார்க்கிறோம். வரக் கூடிய எதிர்கால சந்ததியினரும் இதனைத் தெரிந்து கொள்ளக் கூடிய வகையில் நீதிமன்றம் மூலம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை முதல்வர் பெற்றுத் தந்து இருக்கிறார். முதல்வர் பெற்றுத் தந்த தீர்ப்பை நாட்டு மக்கள் அன்போடு வரவேற்று இருக்கிறார்கள் என்று கூறினார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பொருத்தவரை, இந்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை என்பது வரவே, வராது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு இருக்கிறது. தேவை ஏற்படக் கூடிய பணிகளையும் விரைவாக, செய்து முடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. குடிநீர் திட்டப் பணிகள் மட்டுமல்லாது, கோயம்புத்தூர் மக்களுக்கு என்னென்ன தேவை இருக்கிறதோ ? அதே போல ஊரக பகுதி சாலைகளை மேம்படுத்துவதற்கு ஏறத்தாழ 30 கோடி ரூபாய் இந்த ஆண்டு முதல்வர் வழங்கி இருக்கிறார்.

இதற்கான ஒப்புதல் கிடைக்கப்பெற்ற உடன் ஊராட்சி பகுதிகளில் சாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கிரிக்கெட் ஸ்டேடியம் சாதாரணமாக ஒரு வாரத்தில் செய்யக் கூடிய வேலை இல்லை, அதற்கான இடங்களைத் தேர்வு செய்து வடிவமைப்புகளைத் தயார் செய்து, திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டுச் செயல்படுத்தப்பட வேண்டி இருக்கிறது. கிரிக்கெட் வாரியத்தின் ஒப்புதலைப் பெற்றால் மட்டும் தான் சர்வதேச போட்டிகளை கூட நடத்த முடியும் அதற்கான, பணிகள் கடைசிக் கட்டத்தை எட்டி இருக்கிறது விரைவில் அந்த பணிகளையும் தொடங்கி இருக்கிறோம் என்று கூறினார்.

கிணற்றுக்கடவு பகுதியில், வயதிற்கு வந்த குழந்தையை வெளியில் அமர வைத்து பரீட்சை எழுத வைத்து இருக்கிறார்களே என்ற கேள்விக்கு, அது குறித்து தற்போது காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது, இதில் யாராவது தவறு செய்து இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

மின்வெட்டு தொடர்பாக இதுவரை மின்வாரியத்திற்கு எந்த புகாரும் வரவில்லை, ஏதாவது பழுது காரணமாகக் கூட மின்வெட்டு ஏற்பட்டு இருக்கலாம். யாராவது குறிப்பிட்டுக் கூறினால் அதை இன்று நான் நிச்சயம் ஆய்வு செய்து கொடுக்கிறேன் எனக் கூறினார். தேவைக்கு அதிகமான மின்சாரம் தற்போது நமக்குக் கிடைத்துக் கொண்டு இருக்கிறது. கோடைக் காலத்தில் மிக சிறப்பாக எந்த விடத் தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் கிடைக்க வழிவகை செய்து கொடுக்கிறோம் எனக் கூறினார்a

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!