முன் விரோதத்தால் இளைஞர் கொலை – 4 பேர் கைது
கோயம்புத்தூர் குனியமுத்தூர் அருகே முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை, 4 பேரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர் குனியமுத்தூர் சுண்ணாம்பு கால்வாய் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அசாருதீன் (28). காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை முகமது அசாருதீன் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்றார். அப்போது குனியமுத்தூர் வகாப் பெட்ரோல் பங்க் அருகே வந்த போது அவ்வழியாகச் சென்ற இரு சக்கரம் மீது அசாருதீன் சென்ற வாகனம் மோதியதாகத் தெரிகிறது. அப்போது மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த நபருக்கும், அசாருதீனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
பின்னர் ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு அசாருதீன் சென்றுள்ளார். அப்போது இரு சக்கர வாகன தகராற்றில் ஈடுபட்ட நபர் தனது நண்பர்களோடு அங்கு இருந்துள்ளார். மேலும் அங்கும் அசாருதீனை அழைத்துப் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தாக்கிக் கொண்டனர். இதில் காயமடைந்த அசாருதீன் உள்ளிட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இச்சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் புகார் பதிவு செய்து விசாரித்தனர்.
பிறகு அவர்களைக் காவல் நிலையத்திலிருந்து போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று ( திங்கள்கிழமை ) அசாருதீனை அழைத்த அந்த நபர்கள் மன்னிப்பு கேட்ட வேண்டும் எனக் கூறி குனியமுத்தூர் டைமன் அவென்யூ பகுதிக்கு அழைத்துள்ளனர். இதை நம்பி இரவு 10 மணியளவில் அசாருதீன் சென்ற போது அங்கு இருந்த 6 பேர் மீண்டும் அசாருதீனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாகக் குத்தி விட்டுத் தப்பிச் சென்றனர். இதில் அசாருதீன் மயங்கி கீழே விழுந்தார்.
தகவலறிந்து வந்த குனியமுத்தூர் போலீசார் அசாருதீனை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த அவர் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த ஜூட், மன்சூர், சதாம், அப்பாஸ், சம்சுதீன், முகமது ரபீக், ஆகிய 6 பேரைத் தேடி வந்தனர். இதில் 4 பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனங்கள் உரசிய தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது