செய்திகள்தமிழ்நாடு

9.69% வளர்ச்சியுடன் பொருளாதாரத்தில் புதிய உச்சம் தொட்டது தமிழ்நாடு…!

2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாடு 9.69 சதவிகித உண்மை வளர்ச்சி விகிதத்துடன் நாட்டிலேயே மிக அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த மிக உயர்ந்த வளர்ச்சி வீதம் இதுவேயாகும். 2032-33 ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கினை அடையும்.

2023-24 ஆம் ஆண்டில் ரூ.15,71,368 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (ஜிஎஸ்டிபி), 2024-25 ஆம் ஆண்டில் ரூ.17,23,698 கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன் 2017-18 ஆம் ஆண்டில் அதிக வளர்ச்சி வீதம் 8.59 சதவிகிதம் பதிவாகியுள்ளது.

2020-21ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் குறைந்தபட்சமாக 0.07 சதவிகிதம் எனப் பதிவாகியது. இக்காலகட்டத்தில் பல மாநிலங்கள் எதிர்மறை வளர்ச்சியினைக் கொண்டிருந்த நிலையில், தமிழ்நாடு குறைந்தபட்சம் நேர்மறை வளர்ச்சியினைக் கொண்டிருந்தது.

உண்மை வளர்ச்சி வீதம்

பணவீக்கத்தைக் கணக்கில் கொள்ளாமல் மதிப்பிடப்படும் வளர்ச்சி வீதமே உண்மை வளர்ச்சி வீதம் ஆகும். பணவீக்கத்தையும் கணக்கில் கொண்டு மதிப்பிடப்படும் வளர்ச்சி வீதமே பெயரளவு வளர்ச்சி வீதம் ஆகும். 2024-25 ஆம் ஆண்டு தமிழ்நாடு 14.02 சதவிகிதம் பெயரளவு வளர்ச்சி வீதத்தினைப் பெற்று இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் திகழ்கிறது.

மத்தியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் இணையதளத்தில் குஜராத், பிகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 2024-25 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி வீதத் தரவுகள் பதிவேற்றம் செய்யப்படவில்லை.

தமிழ்நாடு அரசு முதன்முதலாக மார்ச் 2025 இரண்டாம் வாரத்தில் வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் முன்கணிப்பு செய்யப்பட்ட வளர்ச்சி வீதத்துடன், மத்திய அமைச்சகம் வெளியிட்ட உண்மை வளர்ச்சி வீதம் ஒத்துப்போவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்தப் பொருளாதார ஆய்வு 8 சதவிகிதத்தும் மேல் வளர்ச்சி இருக்கும் எனக் கணித்திருந்தது. சென்னைப் பொருளியியல் நிறுவனத்தின் மூத்த பொருளாதார வல்லுநர்களான முனைவர் சி. ரங்கராஜன் மற்றும் முனைவர் கே.ஆர். சண்முகம் ஆகியோர் ஜூலை 2024 இல் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி வீதம் 9.3 சதவிகிதமாக இருக்கும் எனக் கணித்திருந்தனர்.

இறுதியில், மேற்குறிப்பிட்ட இரண்டு மதிப்பீடுகளையும் தாண்டி அதிக வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளது.

வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தவை:

சேவைகள் துறையில் (மூன்றாம் நிலை) அடைந்த 12.7 சதவிகித வளர்ச்சியும் இரண்டாம் நிலைத் துறையில் அடைந்த 9 சதவிகித வளர்ச்சியுமே மாநிலம் அதிக வளர்ச்சியை எட்டியதற்கு முக்கியமான காரணிகளாகும். முதன்மைத் துறையின் செயல்பாடு வெறும் 0.15 சதவிகிதம் மட்டுமேயாகும். மாநிலத்தின் மொத்த மதிப்புக் கூட்டலில் மூன்றாம் நிலைத் துறையின் பங்களிப்பு 53 சதவிகிதம் ஆகும். இரண்டாம் நிலைத் துறை, முதன்மைத் துறையின் பங்களிப்பு முறையே 37 சதவிகிதம், 10 சதவிகிதம் ஆகும்.

மூன்றாம் நிலைத் துறையினைப் பொருத்தவரையில் மனை வணிகம் 13.6 சதவிகிதம், தகவல் தொடர்பு, ஒலிபரப்பு 13 சதவிகிதம், வர்த்தகம் பழுது நீக்கல், தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் 11.7 சதவிகிதம் எனப் பங்களித்திருக்கின்றன. இரண்டாம் நிலைத் துறையினைப் பொருத்தவரையில் உற்பத்தி, கட்டுமானம் முறையே 8 சதவிகிதம், 10.6 சதவிகிதம் வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன.

பயிர்த் தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவை முதன்மைத் துறையின் முக்கியமான பிரிவுகளாகும். இவ்விரண்டு பிரிவுகளும் எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சியினைப் பெற்றிருக்கவில்லை. பயிர்த் தொழில் -5.93 சதவிகிதம் வளர்ச்சியினையும் கால்நடை வளர்ப்பு 3.84 சதவிகிதம் பதிவு செய்துள்ளன.

சென்னைப் பொருளியில் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான முனைவர். கே.ஆர். சண்முகம் 2021-22 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக 8 சதவிகிதம் அல்லது அதற்கு மேலான வளர்ச்சியினைத் தமிழ்நாடு எய்தி வருவதாகத் தெரிவிக்கிறார்.

டிரில்லியன் டாலர் பொருளாதாரம் இலக்கு

எதிர்வரும் ஆண்டுகளில் இந்த 9.7 சதவிகிதம் என்ற வளர்ச்சி வீதத்தினைத் தக்கவைத்துக் கொண்டால், 2032-33 ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கினை அடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!