விடைத்தாள் திருத்த வந்த ஆசிரியர்களைப் பணி செய்யக் கூடாது என அனுப்பிய மாவட்ட கல்வி அலுவலரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!
கோயம்புத்தூரில் 12 ஆம் வகுப்பு விடைத் தாள் திருத்தும் பணிக்கு வந்த ஆசிரியர்களைப் பணி செய்யக் கூடாது என அனுப்பிய மாவட்ட கல்வி அலுவலரைக் கண்டித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் பணியைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் பீளமேடு சர்வஜன பள்ளி என இரண்டு இடங்களில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு விடைத் தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பீளமேடு மையத்தில் மட்டும் சுமார் 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விடைத் தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
20 நாட்கள் இப்பணிகள் நடைபெற உள்ள நிலையில், இப்பணிக்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து விடைத் தாள் திருத்தும் பணிக்கு வந்த பொள்ளாச்சி கல்வி ஆசிரியர்கள் 5 பேரைப் பணி செய்யக்கூடாது எனக் கூறி விடைத் தாள்களை வாங்கி விட்டு வெளியே அனுப்பிய கல்வி அலுவலரைக் கண்டித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் விடைத் தாள் திருத்தும் பணிகளை புறக்கணித்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பள்ளிக் கல்வித் துறை கூறிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றக் கோரியும் கோசங்களை எழுப்பினர். மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேட்ஜ் அணிந்து விடைத் தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.