கோயம்புத்தூர்: ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 72.16 செ.மீ மழைப் பதிவு!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் விடிய விடியக் கொட்டித் தீர்த்த கனமழை. ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 72.16 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது
கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்த நிலையில், கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் இருந்து கோவை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதை தொடர்ந்து மாலையில் இருந்து மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ய துவங்கியது.
குறிப்பாக இரவு முழுவதும் பீளமேடு, ராமநாதபுரம், சிங்காநல்லூர், உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. அதே போல் அன்னூர், சூலூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
இதில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பீளமேடு பகுதியில் ஒரே நாளில் 7.8 செ.மீ மழை பதிவானது. சூலூர் பகுதியில் 7.6 செ.மீ அன்னூரில் 7.5 செ.மீ மழைப் பதிவானது. அதேபோல் தொண்டாமுத்தூர் பகுதியில் 4.8 செ.மீ மழைப் பதிவானது. மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் குறைவான அளவில் மழை பெய்தது.
நேற்று ஒரே நாளில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 72.16 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்த நிலையில் காலை நேரத்திலும் வானம் மேகமூட்டமாகக் காணப்படுகிறது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாகக் கோவையில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.