சாலை விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய Eicher – உயிர் தப்பிய ஓட்டுநர்
கோயம்புத்தூர் மதுக்கரை எல்.என்.டி நெடுஞ்சாலையில் ஈச்சர் லாரி மற்றும் தேங்காய் லோடு ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர், மோதிய விபத்தில் இரு வாகன ஓட்டுநர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்
சேலம் கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில், கோயம்புத்தூர் நீலாம்பூரில் இருந்து மதுக்கரை வரை உள்ள நெடுஞ்சாலை இரண்டு வழிப் பாதைகளாக உள்ளதால், அடிக்கடி வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகிறது.
இந்த நிலையில் நேற்று கேரளாவில் இருந்து தேங்காய் லோடு ஏற்றிக்கொண்டு காங்கேயம் நோக்கிச் சென்ற லாரி, மதுக்கரை எல்.அன்.டி நெடுஞ்சாலையில் வந்தபோது எதிரே, கேரளா நோக்கி பிளைவுட் லோடு ஏற்றிச்சென்ற ஈச்சர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தேங்காய் லோடு லாரி மீது மோதியது. இதில் ஈச்சர் லாரி முழுமையாக சேதமடைந்தது.
இந்த கோர விபத்தில் ஈச்சர் லாரியை ஓட்டி வந்த சின்னராஜ் என்பவர் சிறு காயங்கள் கூட இன்றி அதிஸ்டவசமாக உயிர்த் தப்பினார். இதேபோல் தேங்காய் லோடு லாரி ஓட்டுநர் ராமராஜன் என்பவரும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பியுள்ளார். இந்த விபத்து தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.