Top Storiesகோயம்புத்தூர்

கோயம்புத்தூர்: சிங்காநல்லூரில் கிரிக்கெட் திடல் தொடர்பாக மதிப்பீட்டுக் குறிப்புகள் முன்மொழிவு!

கோயம்புத்தூர் சிங்காநல்லூரில் அமையவுள்ள கிரிக்கெட் திடல் தொடர்பாக மதிப்பீட்டுக் குறிப்புகள் முன்மொழியப்பட்டுள்ளதாக இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விளையாட்டுத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

உள்ளுர், தொழில்முறை மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியான வெற்றிகளுடன் இந்திய கிரிக்கெட்டில் தமிழ்நாடு தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது. மாநிலத்தில் கிரிக்கெட் விளையாட்டில் சென்னையின் ஆதிக்கத்திற்கு அடுத்தபடியாக கோயம்புத்தூர் இரண்டாம் இடமாக கிரிக்கெட் விளையாட்டின் மையமாக விளங்குகிறது.

தனது கிரிக்கெட் வளத்தை மேலும் மேம்படுத்துவதற்காக உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் திடலை உருவாக்கும் திறத்தை கோயம்புத்தூர் பெற்றுள்ளது. இந்த நகரில் வளர்ந்து வரும் கிரிக்கெட் கலாசாரம், மற்றும் உள்கட்டமைப்பில் அதிகரித்து வரும் முதலீடுகள் கோயம்புத்தூரை தமிழ்நாட்டின் ஒரு வலுவான கிரிக்கெட் மையமாக மாற்றும்.

கோயம்புத்தூரில் உள்ள சிங்காநல்லூர் கிராமத்தில் 28.36 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு நிலத்தில் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் திடல் அமைக்கப்படுவதன் நோக்கம் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களுக்கான ஒரு உலகத்தரமான இடத்தை உருவாக்குவதாகும். இதில் பல முக்கிய விளையாட்டு வசதிகளுடன் கூடிய விளையாட்டரங்கம், பயிற்சி ஆடுகளம், பயிற்சி திடல்கள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் விளையாட்டு அகாதெமிகள் போன்ற பல்வேறு விளையாட்டு வசதிகளைக் கொண்டிருக்கும்.

இது, உள்ளூர் போட்டிகளிலிருந்து சர்வதேச போட்டிகள் வரை நடத்துவதற்கு ஏற்ப அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கான மையமாகவும் விளங்குகிறது. மேலும், இங்கு சில்லறை விற்பனை மையங்கள், உணவகங்கள், கிளப், விருந்தினர் மாளிகை, நீச்சல் குளம், ஓடுதளப் பாதை மற்றும் பார்வையாளர் மாட வசதிகள் போன்ற கூடுதல் வசதிகளும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் அரங்கத்தினை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த திட்டத்திற்கான மதிப்பீட்டுக் குறிப்புகளை சர்வதேச கிரிக்கெட் மற்றும் திடல்களுடன் ஒப்பிட்டு ஆலோசகர்கள் முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!