அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் செல்லப்பட்ட கட்டிட கழிவுகள்
கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி மற்றும் ஸ்ட்ரெச்சரை கட்டிட கழிவுகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய விவகாரத்தில் தனியார் ஒப்பந்த நிறுவன கண்காணிப்பாளரை இடைநீக்கம் செய்ய மருத்துவமனை நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.
கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்குத் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் மிகவும் உடல் நலம் மோசமாக உள்ளவர்கள், நடக்க முடியாத நோயாளிகளை ஸ்கேன் செய்யவும், வேறு பிரிவுகளுக்குச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல சக்கர நாற்காலிகள், ஸ்ட்ரெச்சர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் என கிரிஸ்டல் என்ற நிறுவனத்தின் ஊழியர்கள் மருத்துவமனையில் நோயாளிகளுக்குப் பயன்படுத்தும் சக்கர நாற்காலி மற்றும் ஸ்ட்ரெச்சர்களை மருத்துவமனையில் உள்ள கட்டிடக் கழிவுகளை அகற்றப் பயன்படுத்தியுள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் வைரலான நிலையில், இது குறித்து கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து சக்கர நாற்காலி மற்றும் ஸ்ட்ரெச்சரை பயன்படுத்தி ஊழியர்களைக் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
மேலும் இந்த ஒப்பந்த நிறுவன கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்யவும் மருத்துவமனை நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் இதே போல மருத்துவமனையில் நோயாளிகளுக்காக வைத்துள்ள பொருட்களை வேறு வேலைகளுக்குப் பயன்படுத்தினால் பணி நீக்கம் போன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது