வேளாண் பல்கலையில் 45வது பட்டமளிப்பு விழா – மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி
கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 45 ஆவது பட்டமளிப்பு விழாவில் 4,434 மாணவ, மாணவிகளுக்குத்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டம் வழங்கினார்.
கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 45-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகச் சென்னை தோல் ஏற்றுமதி கழகத்தின் நிர்வாக இயக்குநர் செல்வம் பங்கேற்றார். விழாவில், தமிழ்நாடு ஆளுநரும் மற்றும் வேளாண் பல்கலைக்கழக வேந்தருமான ஆர். என்.ரவி பங்கேற்று தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார்.
இந்த பட்டமளிப்பு விழாவில், மொத்தம் 4,434 மாணவர்கள் இளமறிவியல், முதுநிலைப் பட்ட மேற்படிப்பு மற்றும் முனைவர் பிரிவில் பட்டம் பெற்றனர். இதில், கல்லூரிகளில் இருந்து 1,536 மாணவர்கள் நேரடியாகவும், உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் இருந்து 2,898 மாணவர்கள் தபால் மூலமாகவும் பட்டங்களைப் பெற்றனர். விழாவில், பதிவாளர் தமிழ்வேந்தன், வேளாண் பல்கலை பேராசிரியர்கள், மாணவர்கள் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் பல்கலையின் இணை வேந்தர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பங்கேற்பதாக இருந்தது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை நடந்து வரும் நிலையில், அவர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை.