உக்கடம் சி.எம்.சி காலணியில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் ஒதுக்கப்படாததை கண்டித்து பயனாளிகள் பூட்டை உடைத்து குடியேறும் போராட்டம்!
கோயம்புத்தூர் உக்கடம் சி.எம்.சி காலனியில் அடுக்குமாடிக் குடியிருப்பு தமிழக முதலமைச்சரால் திறக்கப்பட்டும், வீடுகள் ஒதுக்கப்படாததைக் கண்டித்து பயனாளிகள் பூட்டை உடைத்துக் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோயம்புத்தூர், உக்கடம் சி.எம்.சி. காலனியில் 520, வெரைட்டி ஹால் சாலையில் 432 தூய்மை பணியாளர்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்நிலையில் புதிதாக அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டித்தருவதாகக் கூறி, அவர்களது வீடுகளை இடித்து அகற்றப்பட்டது. மேலும் தற்காலிகமாகத் தகரக் கொட்டகையில் அனைவரும் தங்க வைக்கப்பட்டனர்.
முதல்கட்டமாக, உக்கடத்தில், 222 வீடுகள், வெரைட்டி ஹால் சாலையில், 192 வீடுகள் மட்டும் கட்டப்பட்டன. இவற்றை, கடந்தாண்டு அக்., 31ல் ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆனால் 6 மாதங்களாகியும் இன்னும் பயனாளிகளுக்கு வழங்கவில்லை. பல முறை அதிகாரிகளிடம் கேட்டும் நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்று வீடுகளுக்கு டோக்கன் வழங்கப்படுவதாகக் குடிசை மாற்று அதிகாரிகள் அறிவித்தனர்.
இதையடுத்து அங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் சிஎம்சி காலணி குடியிருப்பிற்குச் சென்றனர். ஆனால் இன்றும் வீடுகளுக்கு டோக்கன் கொடுக்காமல் வேறு ஒரு நாளுக்கு வரக் கூறியதால் ஆத்திரமடைந்த பயனாளிகள் திடீரென குடியிருப்பில் இருந்த வீடுகளின் பூட்டை உடைத்துக் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.
இ