சிறுத்தை நகங்கள், யானைத் தந்தங்கள் கடத்திய நான்கு பேர் கைது!
கோயம்புத்தூர், ராம் நகரில் பகுதியில் உள்ள ராமர் கோயில் அருகே நான்கு சக்கர வாகனத்தில் யானைத் தந்தங்கள் கடத்துவதாக வனத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. கோயம்புத்தூர் வனச் சரகா் திருமுருகன் தலைமையிலான வனத் துறையினா் காந்திபுரம் ராம் நகா் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக மேட்டூரில் இருந்து வந்த டாடா நெக்ஸான் என்ற நான்கு சக்கர வாகனத்தில் வந்த சதீஷ்குமார், கிருபா, விஜயன் மற்றும் கௌதம் ஆகிய 4 பேரை விசாரனை செய்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததில் சந்தேகம் அடைந்த வனத்துறையினர், வாகனத்தைச் சோதனை செய்தனர். அதில் யானை தந்தம், சிறுத்தையின் பற்கள் மற்றும் நகங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அதனைக் கோயம்புத்தூரில் விற்கக் கொண்டு வந்தது வனத் துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த வனத் துறையினர் 4 பேரை கைது செய்தனர். பின்னர் 4 பேரும் கோயம்புத்தூர் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் 2-இல் நீதிபதி கே.ரமேஷ் முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.