Top Storiesசெய்திகள்

யானை – மனித மோதலை தடுக்க தெர்மல் கேமரா மூலம் கண்காணிப்பு!

கோயம்புத்தூரில் யானை – மனித மோதலை தடுக்க மதுக்கரை, மருதமலை, பொன்னூத்தம்மன் கோவில் பகுதிகளில் தெர்மல் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக உதவி வனப்பாதுகாவலர் விஜயகுமார் தெரிவித்தார்.

கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் சாலை, வடகோவை பகுதியில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தில், சர்வதேச வனதினத்தை முன்னிட்டு, யானை – மனித மோதல் தடுப்பு குறித்த ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மாவட்ட உதவி வன பாதுகாவலர் விஜயகுமார், ஆராய்ச்சியாளர்கள் நவீன் மற்றும் பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டு கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியின் தன்மை, அதை ஒட்டிய பகுதிகளில் ஏற்படும் யானை மனித மோதல்கள், அதற்கான காரணம் மற்றும் தடுப்பு நடவடிக்கையில் குறித்தும், அதில் வனத்துறையினரின் பங்குகள் ஆகியவை குறித்தும் எடுத்துரைத்தனர். இதில் கோயம்புத்தூரைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த உதவி வனப் பாதுகாவலர் விஜயகுமார் கூறியதாவது :
“கோயம்புத்தூர் வனக்கோட்டத்தில் மனித – வனவிலங்கு மோதல்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மதுக்கரை பகுதியில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க ஏ‌ஐ கேமரா கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதால், கடந்தாண்டில் ரயில் விபத்துகளில் யானைகள் எதுவும் உயிரிழக்கவில்லை.

மதுக்கரை, மருதமலை, பொன்னூத்து அம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் தெர்மல் கேமரா மூலம் யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வருவது கண்டறிந்து, வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு வருகிறது. பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. மனித – யானை மோதல்களைத் தடுக்க வாகனங்கள் மற்றும் பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

ஒரு பகுதியை எல்லையை நிர்ணயித்து வாழும் யானை உள்ளிட்ட வனவிலங்குகளை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்தால், அச்சூழலில் அவை பிழைக்க வாய்ப்பு குறைவு. தடாகம் பகுதியில் வேட்டையன் யானை நடமாட்டம் குறைந்துள்ளது. வன எல்லையோரங்களில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!