மதுக்கரை அருகே உலா வரும் சிறுத்தையைப் பிடிக்கக் கூண்டு வைப்பு
கோயம்புத்தூர் மதுக்கரை சட்டக்கல்புதூர் பகுதியில் ஆடு மற்றும் நாயை வேட்டையாடி வரும் சிறுத்தை பிடிக்க வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா மற்றும் கூண்டு வைத்தனர்.
கோயம்புத்தூர் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கோவை – கேரளா எல்லையில் உள்ள சட்டக்கல்புதூர் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில தினங்களாகச் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகக் கிராம விவசாயிகள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
இதையடுத்து வன எல்லையை ஒட்டிய பல்வேறு பகுதியில் கண்காணிப்பு கேமராவை பொருத்தி மதுக்கரை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில், சட்டக்கல்புதூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரது தோட்டத்தில் கட்டி வைத்திருந்த வளர்ப்பு நாயைச் சிறுத்தை வேட்டையாடிக் கொன்று உடலை இழுத்துச் சென்றது.
இதையடுத்து சக்திவேல் மதுக்கரை வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது தோட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறுத்தையின் கால் தடங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தோட்டத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர்.
மேலும் தோட்டத்தில் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். மேலும் வனத்துறையினர் அங்குக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.