Top Storiesகோயம்புத்தூர்

டிஜிட்டல் கைது மோசடியில் ஈடுபட்டவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

கோயம்புத்தூரில் போதைப்பொருள் பார்சல் வந்திருப்பதாகப் போலி டிஜிட்டல் கைது மூலம் பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த கோபி குமார் (42) என்பவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.1.5 லட்சம் அபராதம் விதிப்பு.

கோயம்புத்தூரில் சூலூரைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த நவம்பர் 18-ஆம் தேதி, கூரியர் நிறுவன ஊழியர் போல் பேசிய நபரிடம் ரூ.10 லட்சத்தை இழந்துள்ளார். அந்த நபர், பெண்ணின் பெயரில் போதைப்பொருள் பார்சல் அனுப்பப்பட்டிருப்பதாகக் கூறி, மும்பை சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகளுடன் ஸ்கைப் வீடியோ காலில் பேசும்படி கூறியுள்ளார். பின்னர், பெண்ணின் வங்கி கணக்கு விவரங்களை பெற்று, பணத்தை மோசடி செய்துள்ளார். இது குறித்து கோயம்புத்தூர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், டெல்லியில் “எம்/எஸ் காம்பாக்ட் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட்” மற்றும் “எம்/எஸ் நிஹான்ஷ் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட்” ஆகிய நிறுவனங்களை நடத்தி வரும் கோபி குமார், இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.‌ இதையடுத்து, போலீசார் டெல்லிக்கு விரைந்து சென்று, ஜனவரி 22ஆம் தேதி கோபி குமாரை கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 318 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66D ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.‌

விசாரணையின் முடிவில், கோபி குமாருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 1.5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், கோபிகுமாரின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ததில், அவர் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ரூ.29 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!