முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனிப்பாதுகாப்பு அதிகாரியிடம் சிபிசிஐடி விசாரணை!
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனிப்பாதுகாப்பு அதிகாரியும், ஓய்வு பெற்ற கூடுதல் டி.எஸ்.பி -யுமான பெருமாள் சாமியிடம் சிபிசிஐடி போலீசார் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாகக் கடந்த 2022 -ல் இருந்து சிபிசிஐடி சிறப்புப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 250க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு பதிவு செய்யப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் விசாரணை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய வீரபெருமாளிடம் விசாரணை நடைபெற்றது.
அப்போது கோடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி கேமராக்கள் உள்ளதா? பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனிப்பாதுகாப்பு அதிகாரியும், ஓய்வு பெற்ற கூடுதல் டி.எஸ்.பி யுமான பெருமாள்சாமியிடம், கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். காலை 10 மணியளவில் வந்த பெருமாள்சாமியிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
இதே போல கடந்த 2 மாதங்களுக்கு முன்னாள் பாதுகாப்பு அதிகாரியான ரமேஷிடம் விசாரணை நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தி வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு விவரங்களைப் பதிவு செய்து வரும் வழக்கின் அடுத்த முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது