அழகான சாலைகள்- வித விதமாக நடப்பட்டுள்ள செடிகள்!
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருச்சி சாலை, சுங்கம் ரவுண்டானா முதல் ராமநாதபுரம் சந்திப்பு வரையிலான மையத்தடுப்புகளில் சாலையினை அழகுபடுத்தும் வகையில் செடிகள் நடப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பிரதான பகுதிகளில் உள்ள சாலைகளை அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய மண்டலத்திற்குட்பட்ட திருச்சி சாலை, சுங்கம் ரவுண்டானா முதல் ராமநாதபுரம் சந்திப்பு வரை சுமார் 15 கிலோமீட்டர் நீளத்திற்கு மையத் தடுப்பு பகுதிகளில் தனியார் பங்களிப்புடன் (ஜெம் மருத்துவமனை) செடிகள் நடப்பட்டு, பராமரிக்கப்படவுள்ளது. மேலும், திருச்சி சாலை, அல்வேனியா பள்ளி அருகில் உள்ள பாலம் முடியும் வரையில் மையத்தடுப்பு பகுதிகளிலும் செடிகள் நடப்படவுள்ளது.
மேலும், தனியார் பங்களிப்புடன் மாநகராட்சிக்கு உட்பட்ட ரேஸ் கோர்ஸ் சாலை பகுதியில் புதிதாகக் குதிரை சிலை, காளை மாடு சிலை, உலக உருண்டை சிலைகளும், அதேபோன்று உக்கடம் ரவுண்டானா பகுதியில் உழவர் சிலை மற்றும் சிந்தாமணி ரவுண்டானா அருகில் மனித உலக உருண்டை சிலைகளும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் தீவுத்திடல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டும் மாநகராட்சிக்கு உட்பட்ட சுமார் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை தீவுத்திடல் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.