கோயம்புத்தூரில் பிடிபட்ட சிறத்தை உயிரிழப்பு!
கோயம்புத்தூர் ஓணப்பாளையம் பகுதியில் உடல் நலக்குறைவுடன் பிடிபட்ட பெண் சிறுத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
கோயம்புத்தூர் ஓணாப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 1 மாதமாக கால்நடைகளை சிறுத்தை ஒன்று தாக்கி வேட்டையாடியது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் விவசாய தோட்டத்தில் கட்டி வைத்திருந்த 4 ஆடுகளை கொன்றது. இதையடுத்து வனத்துறை கண்காணிப்பு கேமரா மற்றும் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க காத்திருந்தனர்.
இந்த நிலையில் கலிக்கநாயக்கன்பாளையம் பூச்சியூர் அருகே உள்ள பயனற்ற கட்டிடத்தில் சிறுத்தை இருப்பதாக வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து கோவை சரக வனத்துறையினர் அங்கு முகாமிட்டு சிறுத்தை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது நள்ளிரவில் திடிரென வெளியே வந்த சிறுத்தை அங்கிருந்த பொதுமக்கள் 2 பேரை தாக்கியது. அப்போது இருவரும் சிறுத்தையை மடக்கிய நிலையில், வனத்துறையினர் சிறுத்தையை பிடித்தனர்.
பிடிபட்ட சிறுத்தை உடல் நிலை மெலிந்த நிலையில் சோர்வாக காணப்பட்டது. மேலும் உடலில் நோய் தொற்றும் காணப்பட்டது. இதையடுத்து பிடிபட்ட சிறுத்தை மருதமலை வனத்துறை அலுவலத்தில் வைத்து கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையிலான மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்தனர். இந்நிலையில் சிறுத்தை சிகிச்சை பலனின்றி மதியம் 1 மணியளவில் உயிரிழந்தது.