கோயம்புத்தூரில் ஆடுகளை வேட்டையாடி வந்த சிறுத்தை பிடிபட்டது –
கோயம்புத்தூர் அடுத்த தொண்டாமுத்தூர் ஓணாப்பாளையம் பகுதியில் ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தையை வனத்துறையினர் பிடித்தனர். சிறுத்தை பதுங்கிருந்த கட்டிடம் அருகே சென்ற உள்ளூர் வாசிகள் இருவரை சிறுத்தை தாக்கியதில் காயமடைந்தனர்.
கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஓணாப்பாளையம் பகுதியில் உள்ள சின்னசாமி தோட்டத்தில் வெண்ணிலா என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இவரது தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று அங்குக் கட்டி வைத்திருந்த நான்கு ஆடுகளை வேட்டையாடிக் கொன்றது. இதையடுத்து கால்நடைகளை அச்சுறுத்தி வந்த சிறுத்தையைப் பிடிக்கக் கோவை சரக வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் இரண்டு பகுதிகளில் கூண்டுகளை வைத்துக் கண்காணித்து வந்தனர். ஆனாலும் அதே தோட்டத்திற்கு வந்த சிறுத்தை கூண்டில் சிக்காமல் அருகே அடைத்து வைத்திருந்த ஆடுகளையே வேட்டையாட முயன்று, போக்கு காட்டி வந்தது.
இந்த நிலையில் ஓணப்பாளையம் அருகே உள்ள பூச்சியூர் பூபதி ராஜா நகர்ப் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத பழைய கட்டிடம் ஒன்றில் சிறுத்தை பதுங்கி இருப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவை வனச்சரகர் திருமுருகன் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வடவள்ளி போலீசார் பூபதி ராஜா நகர்ப் பகுதியில் முகாமிட்டு சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களும் அங்குக் கூடியதால் அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார். பின்னர் சிறுத்தையைப் பிடிக்கக் காத்திருந்தபோது கட்டிடத்தின் அருகே சென்ற அதே பகுதியைச் சேர்ந்த பூபதி மற்றும் கார்த்திக் ஆகிய இருவரைக் கண்ட சிறுத்தை அங்கிருந்து தப்ப முயன்றதோடு, சுஜித் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் கடித்துத் தாக்கியது.
அப்போது சுதாரித்துக் கொண்ட இருவரும் சிறுத்தையை மடக்கிப் பிடித்துக் கொண்டனர். உடனே பணியில் இருந்த வனத்துறை ஊழியர்கள் வலையைப் போட்டு சிறுத்தையை மடக்கினர். பின்னர் கால்நடை மருத்துவர் சுகுமார் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினார். இதையடுத்து பிடிபட்ட சிறுத்தை கூண்டில் அடைக்கப்பட்டு மருதமலை வனப்பகுதிக்குக் கொண்டு சென்றனர். சிறுத்தையின் உடல்நலம் ஆய்வு செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்குப் பின் அடர் வடபகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.