கோடநாடு கொலை கொள்ளை வழக்கு – முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்
கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக, 2022 -ல் இருந்து சிபிசிஐடி சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை 250க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடன் சிபிசிஐடி போலீசார் சுமார் 7 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகளை போலீசார் எழுப்பியுள்ளனர்.
குறிப்பாகக் கடந்த ஜன 19 ஆம் தேதி ஜெயலலிதா நினைவகம் அடிக்கல் நாட்டு விழாவிற்காக சசிகலா கோடநாடு எஸ்டேட் வந்த போது, பங்களாவில் உள்ள அறைகளைப் பார்த்துவிட்டு ஏதாவது கேட்டாரா? என போலீசார் கேள்வி எழுப்பினார். ஆனால் சசிகலா ஏதும் கேட்கவில்லை என நடராஜன் கூறியுள்ளார். மேலும் கணினி ஆப்பரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை குறித்தும் நடராஜானிடன் கேள்வி எழுப்பட்டுள்ளது. மாலை 6.30 மணிக்கு விசாரணை நிறைவடைந்துள்ளது. பல்வேறு முக்கிய கேள்விகளுக்கு நடராஜன் பதிலளித்துள்ளார். அவை முழுமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளை விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். மார்ச் 11 ஆம் தேதி கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல அப்போதைய பாதுகாப்பு பிரிவு ஆய்வாளராக இருந்த கனகராஜ் இறுதியாக விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜுக்கு குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாகவும், அவர் தனது சொல்போனை இதுவரை ஒப்படைக்காதது குறித்து உயர் அதிகாரியாக இருந்த வீரபெருமாளிடம் விசாரணை மேற்கொள்ள உள்ள கூறப்படுகிறது.