ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கைவிட வலியுறுத்தி சட்டக்கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!
ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை கைவிட வலியுறுத்தி கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கைவிட வலியுறுத்தியும், இதன் மூலம் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முயலும் ஒன்றிய அரசைக் கண்டித்தும் கோவை மருதமலை சாலையில் உள்ள சட்டக்கல்லூரி நுழைவு வாயிலில் சட்டக்கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒன்றிய அரசைக் கண்டித்து கோசங்களை எழுப்பினர்.
இது குறித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் கூறும் போது, இன்று ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை என்ற பெயரிலான மும்மொழி கொள்கை முழுக்க முழுக்க ஹிந்தி திணிப்பதற்கான மறைமுக முயற்சியே. ஒன்றிய அரசு தொடர்ந்து ஒவ்வொரு இடத்திலும் நிதி தரமாட்டான் என மறுக்கிறார்கள். கல்விக்காகத் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை முன்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் தருவோம் என்கிறார்கள்.
இந்த மும்மொழி கொள்கையில் ஹிந்தி திணிப்பு இல்லை, மற்ற மொழிகளை கற்கலாம் எனக் கூறுவது நடைமுறை சாத்தியம் அல்ல. கடந்த பிப்ரவரி 11-ல் தேதி ஒரு புள்ளி விபரம் வந்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் உள்ள 20 கேந்திர வித்யாலயா பள்ளியில் ஒரு தமிழாசிரியர் கூட கிடையாது. மாறாக ஹிந்திக்காக 101 ஹிந்தி ஆசிரியர்களும், 29 சமஸ்கிரத ஆசிரியர்கள் உள்ளனர்.
இது மட்டுமில்லாமல் புதிய கல்விக் கொள்கையில் பல முரண்பாடு விஷயம் உள்ளது. இது வர்ணாசிரம கட்டமைப்பைத் தமிழ்நாட்டுக்குள் இன்னும் வலிமையாக ஊன்றுவதற்கான வழிவகை செய்கிறது. மாறாகத் தமிழ்நாடு முழுக்க முழுக்க ஓபிசி பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் முன்னேறுவதற்கான வழியைப் பார்த்துக் கொண்டுள்ளது. ஆனால் மாறாகச் சாதிய கட்டமைப்பை வலுப்படுத்த வகையில் இன்றைக்கு ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கையைத் திணிக்க நினைக்கிறார்கள். இந்தியைத் திணிக்க நினைக்கிறார்கள், என்ன ஆனாலும் சட்டக் கல்லூரி மாணவர்கள், தமிழர்களாகிய நாங்கள் ஒருபோதும் இந்தி மொழியைத் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறினார்.