மதுக்கரை அருகே கஞ்சா மற்றும் உயர்ரக போதை பொருள் விற்க முயன்ற 6 பேர் கைது..
.மதுக்கரை,மார்ச்.1: கோவை மதுக்கரை அருகே இளைஞர்கள், மாணவர்களை குறி வைத்து கஞ்சா மற்றும் உயர்ரக போதை பொருள் விற்க முயன்ற 6 பேரை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர்.
கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து கண்காணிப்பை தீவர்ப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மதுக்கரை காவல் ஆய்வாளர் நவமணி தலைமையிலான போலீசார், மதுக்கரை – பாலத்துறை பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கேரளா பதிவு எண் கொண்ட கார் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தி, காரில் வந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஹெரான் (28), நபில் (30) மற்றும் கோவை பிச்சனுரை சேர்ந்த ஜெயக்குமார் (30) ஆகிய மூன்று பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த போலீசார், காரை சோதனையிட்டனர். அப்போது காரில் சுமார் 4.75 கிலோ கஞ்சா மற்றும் 10 கிராம் எடையுள்ள மெத்தபெட்டமைன் என்ற உயர்ரக போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்ட மூவரும் ஏற்கனவே கோவையை சேர்ந்த முகமது நாசர் என்பவர் ஏற்கனவே இவர்களிடம் கஞ்சா வாங்கியதாகவும், அவர் மீண்டும் கேட்டதால் கஞ்சாவுடன் வந்ததையும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது நாசர் மற்றும் ஷாஜகான் ஆகிய இருவரை போலீசார் பிடித்து அவர்களிடமிருந்து சுமார் 2 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். அதேபோல் மதுக்கரை குவாரி ஆபீஸ் பகுதியில் உள்ள பேக்கரியில் இவர்களுக்காக காத்திருந்த சாதிக் பாஷா என்பவரையும் போலீசார் பிடித்து அவரிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீசாரின் தொடர் விசாரணையில் கேரளாவை சேர்ந்த ஹெரான், நபில் உள்ளிட்டோர் கஞ்சாவை கேரளாவில் இருந்து வாங்கி வந்து அதனை இவர்கள் மூலம் கோவை சேர்ந்த இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த கார்த்திகேயன் மகன் ஹெரான் (28), நாசர் மகன் நபில் (30), பிச்சனூரை சேர்ந்த ராஜ் மகன் ஜெயக்குமார் (30), உக்கடத்தை சேர்ந்த காசிம் மகன் அப்துல் நாசர் (36), கேரளாவை சேர்ந்த மஜீத் மகன் ஷாஜகான் (28), உக்கடத்தை சேர்ந்த அபூபக்கர் சித்திக் மகன் சாதிக் பாஷா (29) ஆகிய ஆறு பேரை மதுக்கரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 8.75 கிலோ கஞ்சா, 10 கிராம் மெத்தபெட்டமைன் உயர்ரக போதை பொருள், கார், இருசக்கர வாகனம், பயணிகள் ஆட்டோ மற்றும் 7 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
